பேரூர்:தக்காளிக்கு கட்டுப் படியாகும் விலை இல்லாததால், ரோட்டில் கொட்டும் பரிதாப நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், சின்ன வெங்காயத்துக்கு அடுத்தப்படியாக, நாட்டு தக்காளி அதிக பரப்பில் சாகுபடியாகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை, தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், தக்காளி விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. தற்போது, ஒரு கிலோ தக்காளி, விவசாயிகளிடம் இருந்து, ரூ.10க்கு மட்டுமே கொள்முதலாகிறது. டிப்பர் (15 கிலோ) ரூ.150க்கு கொள்முதலாகிறது.இத்தகைய சூழ்நிலையில், தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. அதனால், விற்பனை மிகவும் சரிந்து, பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது. மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்றும் விற்பனையாகாததால், ரோட்டோரம் மற்றும் நீரோடை கரைகளில், கொட்டி செல்லும் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.ஜாம் தொழிற்சாலை கோரிக்கை என்னாச்சு?தொண்டாமுத்துார் வட்டாரத்தை மையமாக கொண்டு, தக்காளி ஜாம் தொழிற்சாலை அமைக்க, விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, தேர்தல் காலம் என்பதால், தக்காளி ஜாம் தொழிற்சாலை அமைக்க, ஆளும் கட்சியினர் நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளின் ஆதரவு பெருமளவில் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.