திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நிவர் புயலால் மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் என்று எண்ணிய விவசாயிகள் துாறல் கூட இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.
திருவாடானை தாலுகாவில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது பயிர்கள் வளர்ச்சிக்காக உரங்களை போட்டு மழைக்காக காத்திருக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையை நம்பி நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் உரமிட்ட விவசாயிகள் நிவர் புயல் அறிவிக்கப்பட்டதால் கண்டிப்பாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் துாறல் கூட இல்லாததால் கவலையடைந்தனர்.
அஞ்சுகோட்டை விவசாயிகள் கூறியதாவது:நிவர் புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்தோம். கடைசி கட்ட மழைக்காக பயிர்கள் இருப்பதால் மழை பெய்யும் பட்சத்தில் முழு விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் துாறல் கூட இல்லாமல் போனது கவலையாக உள்ளது, என்றனர்.