:டென்ஷன்':போக்குவரத்து நெரிசலால், நேற்று பல மணி நேரம் அன்னுார் நகரம் ஸ்தம்பித்தது. போக்குவரத்து போலீசார் நியமித்து, இதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், அவிநாசி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது.
முகூர்த்த நாட்களில் அன்னுார் நகரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது வழக்கமாக உள்ளது. நேற்று கார்த்திகை மாத வளர்பிறை சுப முகூர்த்த நாள் என்பதால், நகரில் போக்குவரத்து மிக அதிகமாக இருந்தது. காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணி வரை, கடும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.அவிநாசி சாலையில், இரண்டு கி.மீ., தொலைவுக்கு, நாகமாபுதுார் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சத்தி சாலையில், இந்திராநகர் வரை, வாகனங்கள் நின்றன. பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமலும், உள்ளே செல்ல முடியாமலும் திணறின.ஆக்கிரமிப்புகோவையிலிருந்து அன்னுாருக்கு பஸ்சில் வந்த பயணிகள், நெரிசலால் காத்திருக்க முடியாமல், இறங்கி நடந்து சென்றனர். பாதுகாப்பு பணிக்காக, அன்னுார் போலீசார் பலர் சூலுாருக்கு சென்று விட்டதால், இருந்த ஒரு சில போலீசாராலும், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியவில்லை.இதுகுறித்து, அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் நகரில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். நிரந்தரமாக அவிநாசி சாலை, சத்தி சாலை கார்னரிலும், கைகாட்டியிலும், போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும். பிரதான சாலையில், பல இடங்களில் கடைகளின் ஆக்கிரமிப்புகளும், மின் கம்பங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.நிலுவையில்...கிழக்கு புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு ஆணை வெளியிட்டு, ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் பணி துவங்கவில்லை.
மேற்கு புறவழிச்சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தில், எட்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது.இந்த இரு புறவழிச்சாலை பணிகளையும் விரைந்து துவக்க வேண்டும். நகரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். சத்தி சாலையில் இருந்து, இட்டேரி சாலை வழியாக, நாகமாபுதுாரை அடையும் பாதையை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்க வேண்டும்.மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஓதிமலை சாலைக்கு வரும் குளக்கரை சாலையை பலப்படுத்த வேண்டும். இப்பணிகளை செய்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தவறினால், முகூர்த்த நாட்களிலும், வாரசந்தை கூடும் சனிக்கிழமையன்றும், அன்னுார் மக்களின் வேதனையை தீர்க்க முடியாது.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.