பொள்ளாச்சி:கொரோனா ஊரடங்கு காரணமாக, பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க தடை நீடிக்கிறது. இதனால், வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்கள் உள்ளன. அதில், குரங்கு அருவி, டாப்சிலிப், வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளன.விடுமுறை, பண்டிகை நாட்களில் வனச்சரகத்துக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆழியாறு சோதனைச்சாவடியில், குரங்கு அருவி செல்வதற்கும்; கேமரா பயன்பாடு போன்றவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பரம்பிக்குளம், டாப்சிலிப் பகுதிகளுக்கு செல்லும், சுற்றுலாப்பயணிகள், சேத்துமடை சோதனைச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம்; டாப்சிலிப்பில் தங்கும் விடுதிகள் வாயிலாக வனத்துறைக்கு வருமானம் வந்தது.இதனை கொண்டு வனத்துறை தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த, எட்டு மாத காலமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்க அரசு தடை நீடிக்கிறது. இதனால், வனத்துறை வருவாய் பாதித்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனத்துறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால், 2 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்,' என்றனர்.