கடலுார்:''நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்,'' என, முதல்வர், பழனிசாமி., தெரிவித்தார்.
கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின், முதல்வர் அளித்த பேட்டி: 'நிவர்' புயல் வீசப் போகிறது என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, புயலால் பாதிக்கும் மக்களுக்கு, எடுக்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து, அறிவுரை வழங்கியிருந்தோம்.
கடலுார் மாவட்டத்தில் அதிகளவு சேதமாகும் என, வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதால், கலெக்டரை தலைமை செயலரும், நானும் அடிக்கடி தொடர்பு கொண்டோம். அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், எஸ்.பி., ஆகியோரையும் தொடர்பு கொண்டு, அறிவுரை வழங்கினோம்.
வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரும், சென்னை எழிலகத்தில் தங்கி, கட்டுப்பாட்டு அறை அமைத்து, புயல் தொடர்பாக வெளியில் இருந்து வரும் செய்திகளை வாங்கி எனக்கு தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அனைத்து முன்னெச்சரிக்கைகளும் சரியான முறையில் எடுக்கப்பட்டதால், 'நிவர்' புயலால், பெரியளவில் பாதிப்பில்லை.
தமிழகம் முழுதும், புயலால் பாதிக்கும் மக்களை தங்க வைக்க, 4,133 முகாம்கள் தயார் செய்யப்பட்டன.அவற்றில், 13 லட்சம் பேரை தங்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 2,991 முகாம்களில், 2.30 லட்சம் பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர். கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரை, 441 முகாம்களில், 52 ஆயிரத்து, 226 பேர் தங்க வைக்கப்பட்டனர்.மாவட்டம் முழுதும், பாதிக்கப்பட்ட, 77 மின் கம்பங்களை சரி செய்து, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் காற்றில், கடலுாரில், 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்து மரங்களும் அகற்றப்பட்டன. புயலால், மணிலா, வாழை, மரவள்ளி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுக்கவில்லை. அந்த பணி முடிந்தால் தான், முழுமையான புள்ளி விபரம் தெரியும்.இதேபோல், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மேலும், பயிர் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்திருந்தால், உடன் இழப்பீடு தொகை வழங்கப்படும்.சரியான வழிகாட்டுதலின்படி நடந்ததால், நிவர் புயலில் இருந்து, தமிழகம் காப்பாற்றப்பட்டது என்பதை, தெரிவித்துக் கொள்கிறேன். இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., க்கள், எஸ்.பி., அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.