உடுமலை:உடுமலை போடிபட்டியில், 'அம்மா' உடற்பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூங்கா வசதிகள் நகரப்பகுதிகளில் மட்டுமே அதிகமாக இருப்பதால், முதியோர் நடைபயிற்சி செய்வது, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் கிராம பகுதி மக்களுக்கு அத்தகைய வசதிகள் இல்லை.மேலும், இளைஞர்கள், மற்றும் உடல்நிலை தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புக்கு பயிற்சி பெறுவோரும், உடற்பயிற்சி செய்ய நகரப்பகுதி மைதானங்களுக்கும் தனியார் மையங்களுக்கும் வரவேண்டிய நிலை இருந்தது.இந்நிலையில், உடுமலை ஒன்றியத்தில், பெரியகோட்டை மற்றும் போடிபட்டி ஊராட்சிகளில் 'அம்மா' உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் மைதானங்களுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.போடிபட்டி ஊராட்சியிலுள்ள அம்மா உடற்பயிற்சி மையம்,பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக திறக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முதியோர் நடைபயிற்சி செய்வதற்கும், உடற்பயிற்சிகளை மீண்டும் தொடரவும், மையம் வழக்கமான நேரத்தில் செயல்பட, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், உடற்பயிற்சி மையங்களை செயல்பட அரசு அறிவித்து விட்டது. அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர், சமூக விலகல் பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மையங்களில் செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.