தர்மபுரி:சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில், வயதான தம்பதி கருகி பலியாயினர்.
தர்மபுரி மாவட்டம், வரதகவுண்டனுாரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 80; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி, 70; மகன் சிவஞானம், 45. தம்பதி, ஓட்டு வீட்டில் தனியாக வசித்தனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு வீட்டில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு, அருகே வசிக்கும் மகன் சிவஞானம் ஓடி வந்து பார்த்தார். பெற்றோர் வசித்த வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு, கதறி அழுதார்.
பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ராமாயி உடல் கருகி பலியானார். படுகாயமடைந்த வெங்கடாசலம், சேலம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.