ஆனைமலை;ஆனைமலை, செமணாம்பதி அருகே, கடமான் வேட்டையாடிய ஏழு பேர் மீது, ஆனைமலை போலீசார் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனைமலை, செமணாம்பதி அருகே, 2019, மே, 4ம் தேதி, பெண் கடமான் வேட்டையாடப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான, மாரப்பகவுண்டன்புதுாரைச் சேர்ந்த 'லேத் ஒர்க்ஷாப்' உரிமையாளர் பாலகிருஷ்ணன், 48, அதேபகுதியை சேர்ந்த தமிழரசன், 38, துரைசாமி, 62, காளிமுத்து என்கிற கனகராஜ், 55, கணேஷ், 35, பெரியபோது பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 51, கேரள மாநிலம் வண்ணாமடையைச் சேர்ந்த பிரகாஷ், 29, ஆகிய ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
இதில், பாலகிருஷ்ணன் 'ஒர்க்ஷாப்பில்' நாட்டு துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. அவரிடமிருந்து, 273 தோட்டாக்கள், பாறை வெடி மருந்து, மற்றும் நாட்டு ரக துப்பாக்கி ஒன்று மற்றும் மூன்று துப்பாக்கிகளின் பாகங்களை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில், ஏழு பேர் மீதும், ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறியதாவது:வனத்துறையினருக்கு, ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க அதிகாரம் இல்லை. போலீசார் மட்டுமே விசாரிக்க முடியும். இதனால், பொள்ளாச்சி ஜே.எம்., - 1, கோர்ட் உத்தரவுப்படி, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கனவே இந்த தோட்டாக்கள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி, தயாரிக்கப்பட்ட காலம், மருந்தின் விபரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருந்தால், குற்றவாளிகளை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.