குன்னுார்:குன்னுார் நகராட்சியில், கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால், விதிமீறிய கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளது.குன்னுார் நகராட்சியில், ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, விதிமீறிய கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. இத்தகைய கட்டுமானங்களுக்கு, 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுத்த, இரு கமிஷனர்கள், அரசியல் நிர்பந்தங்களால், இடமாற்றம் செய்யப்பட்டனர்.தற்போது, நகராட்சி பொறியாளர் கூடுதல் கமிஷனர் பொறுப்பு வகிப்பதால், பணிகளை முழுமையாக மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது, 2 அடுக்கு முதல் 4 அடுக்கு வரை, நகரின் பல பகுதிகளில், கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது.மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''நீலகிரியில், ஐகோர்ட் உத்தரவுகளை அரசு துறையினர் மதிப்பதில்லை. பஸ் ஸ்டாண்ட் ஆற்றோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் மெத்தனமாக உள்ளனர். இதே போல, 'சீல்' வைத்த கட்டடங்களில் பணிகள், நகர திட்ட அலுவலர்கள் உடந்தையுடன் நடப்பதாகவே தெரிகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.