குன்னுார்;'குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், 40 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, தொழிலாளர் நல துறை உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குன்னூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை, 'சைல்டு லைன், சர்வ சிக் ஷா அபியான்' ஆகியவற்றின் சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு 'பேனர்' வைக்கப்பட்டது.பின்பு, குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., ரோடு, மவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில், ஆய்வு நடத்திய தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் கூறுகையில், ''நீலகிரியில், தொழிலாளர் நலத்துறை, 'சர்வ சிக் ஷா அபியான்' செயல்நிலை ஆகியவை பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நீலகிரியில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை. நிறுவனங்கள் மற்றும் கடைகளில், குழந்தைகளை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் உரிமையாளருக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என்றார். தொழிலாளர் நல ஆய்வாளர்கள் நவீன கிருஷ்ணா வசந்தா, சைல்ட் லைன், சர்வ சிக் ஷா அபியான் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தடுப்பு குழுவினர் பங்கேற்றனர்.