ஊட்டி:முதுமலை வனத்தின் சுற்றுச் சூழல் சேவை பொருளாதார மதிப்பீடு ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 668 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துஉள்ளது. இதன் கள இயக்குனர் கவுசல் மேற்பார்வையில் மத்திய வன சேவை மையத்தை சேர்ந்த பயிற்சி உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் முதுமலை வனங்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவை பொருளாதார மதிப்பீடு குறித்த சிறப்பு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு குறித்து சீனிவாசன் கூறுகையில்''நம் நாட்டில் புலி யானைகள் அதிகளவு வசிக்கும் இடமாக முதுமலை உள்ளது. வனங்களில் மண்வள பாதுகாப்பு வளிமண்டலத்தின் காலநிலை மற்றும் வாயுக்கள் நிலை சீராக உதவுகிறது. புலிகள் காப்பகத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கால்நடைகளுக்கு தீவனம் கார்பன் அளவு கட்டுப்பாடு என பல நன்மைகள் கிடைக்கின்றன.
வனவளம் மற்றும் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த முதுமலை வனங்களின் சுற்றுச்சூழல் சேவையின் பொருளாதார மதிப்பீடு ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறுகையில்''வனங்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைக்கு பண மதிப்பு அளிப்பதால் காடுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த மதிப்பீடு வனங்கள் பலன் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும்'' என்றார்.