மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக மழை பெய்யாததை அடுத்து ஏராளமான திருமண வீட்டார் நிம்மதி அடைந்தனர்.
தமிழகத்தில் நேற்று அதிகாலை கரையை கடந்த நிவர் புயலால் சென்னை, கடலுார் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ததை அடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ரோடுகளில் போக்குவரத்து இல்லாமல் முடங்கியது. இந்நிலையில் நிவர் புயல் தென்மாவட்டங்களிலும் சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மேகமூட்டமாக காணப்பட்ட போதும், மழை பெய்யவில்லை.
நேற்று முகூர்த்த தினம் என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்ற நிலையில் மழை வரும் என்பதால் திருமண வீட்டார் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மழை பெய்யாததால், திருமண வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.