பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மருத்துவ படிப்புக்கு, 'சீட்' கிடைத்தும் பணம் செலுத்த முடியாததால், மாணவர், 'கேட்டரிங்' வேலைக்கு செல்கிறார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனியை சேர்ந்த முருகன் மகன் சபரி. இவர், சமத்துார் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். 'நீட்' தேர்வில், 155 மதிப்பெண் பெற்று, அரசின் உள் இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஆனால், பணம் செலுத்த முடியாததால், மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
மாணவன் சபரி கூறியதாவது:உடல்நிலை சரியில்லாமல் இருந்த அப்பா, ஏழு மாதத்துக்கு முன் இறந்தார். அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், இரண்டு தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்தது. பணம் செலுத்த முடியாததால், காத்திருப்பு பட்டியலில் உள்ளேன். கவுன்சிலிங் முடிந்த பின், தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவருக்கும் பணம் செலுத்துவதாக அரசு தெரிவித்தது.
இந்த அறிவிப்பு 'கவுன்சிலிங்' முடிந்த பின் வந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை.தற்போது, ஆல் இந்தியா கவுன்சிலிங்க்கு விண்ணப்பித்துள்ளேன். மருத்துவ படிப்புக்கு 'சீட்' கிடைக்க அரசு உதவ வேண்டும். தற்காலிகமாக, 'கேட்டரிங்' பணிக்கு செல்கிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாணவன் சபரியின் தொடர்பு எண்: 63820 12454