n
மாவட்டத்தில் 10,158 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 9,905 பேர் குணமாகினர். இன்னும் 60 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் கொரோனா பாதிக்காத கிராமங்கள் குறித்து நடத்திய கணக்கெடுப்பில் மாவட்டத்தில் 24 கிராமங்களில் ஒருவருக்கு கூட தொற்று பாதிக்காதது தெரியவந்தது. இவர்களை தொற்று பாதிக்காதது குறித்து, 'செர்ரோ சர்வே' எனும் ஆய்வை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் குள்ளனம்பட்டி, அய்யம்பாளையம், கசவனம்பட்டி, வேல்வார்கோட்டை, லிங்கவாடி, மாரம்பாடி, அஞ்சுக்குழிபட்டி உட்பட 24 கிராமங்களில் தலா 30 பேர் வீதம் மொத்தம் 720 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் (180 பேர்) பேருக்கு மட்டுமே இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.
மீதமுள்ளவர்களுக்கு அப்பகுதியில் யாரும் தொற்றுக்கு ஆளாகாததால் அவர்களை கொரோனா தாக்காததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 'எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டால்தான் வரும் காலங்களில் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.