கோவை:கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட, தொழிற்சங்க அமைப்பினர், 404 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல்., ஆகிய அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வந்தனர். பஸ், டாக்ஸி, ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை, மறியல் போராட்டம் நடந்தது. எம்.பி., நடராஜன் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இன்சூரன்ஸ், வருமானவரி, தபால் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் முன் போராட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.கோவை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட, 88 பெண்கள் உட்பட, 369 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட, 35 பேர் கைது செய்யப்பட்டனர்.