ராமேஸ்வரம்:மீன்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் 'நிவர்' புயல் தடையை மீறி ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மீனவர்கள்மீன்பிடித்து கரை திரும்பினர்.
வங்க கடலில் உருவான 'நிவர்' புயலால் நவ.,22 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர்தடை விதித்தனர். இதனால் 2 ஆயிரம் விசை, நாட்டுபடகுகளை கரையில் நிறுத்திவிட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.ஆனால் தடையை மீறி நவ.,25ல் பாம்பனில் இருந்து சில நாட்டுபடகில் மீன்பிடிக்க சென்றவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.
இவர்களிடம் மீன்கள் வாங்க பாம்பனில் ஏராளமான மீன் வியாபாரிகள் காத்திருந்தனர். 'நிவர்' புயலால் ராமேஸ்வரம், பாம்பன் கடலில் இயற்கை சீற்றம் இல்லாததால், மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படவில்லை.இருப்பினும் தடையை மீறி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், தடை உத்தரவை முறையாக அமல்படுத்த தவறிய மீன்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.