மதுரை : மதுரையில் 'அண்டர் பாஸ்' விமான ஓடுதள திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் அங்கீகரிக்க தமிழக அரசு முயற்சி செய்து, கூடுதல் செலவை ஏற்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: மதுரை விமான நிலையம் 17,000 ச.மீ.,ல் சென்னைக்கு அடுத்து பெரிய விமான நிலையமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 1,25,000 பேர் பயணிக்கிறார்கள். 7500 அடி நீள ஓடு பாதையை 12,500 அடி விரிவாக்கம் செய்ய 10 ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு பணிகள் துவங்கின. நிலம் கையகப்படுத்த தாமதமாகி தற்போது 460 ஏக்கர் பட்டா, 155 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என 90 சதவீதம் கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு ரூ.166 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை சுற்றுச்சாலை துண்டிக்காமல் 'அண்டர் பாஸ்' ஓடுதளம் அமைப்பது குறித்து அமைச்சர் உதயகுமார் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த முறையில் மேலே விமானம், கீழே வாகனம்செல்ல முடியும்.பிரதமரின் வாரணாசி லால்பதுார் சாஸ்திரி, மைசூரு விமான நிலையத்தில் 'அண்டர் பாஸ்' ஓடுதளம் உள்ளது.
மதுரை 'அண்டர் பாஸ்'க்கு ரூ.250 கோடி, சுற்றுச்சாலை வழி ஓடுதளத்திற்கு ரூ.100 கோடி செலவாகும். அண்டர் பாஸ் செலவு அதிகமாவதால் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் அங்கீகரிக்கவில்லை என தெரிகிறது.சுற்றுச்சாலைக்கு கூடுதல் நிலம் கையகம் செய்ய பணிகள் துவங்காததால் ஓடுதள விரிவாக்க திட்டம் வர பல ஆண்டுகளாகும். எனவே, இத்திட்டம் செயல்பட தமிழக அரசு முயற்சித்து, கூடுதல் செலவை ஏற்க வேண்டும் என்றார்.