நெய்வேலி: 'நிவர் புயல்' சீற்றம் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க என்.எல்.சி.,நிறுவனம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுத்தது.நெய்வேலி நகரில் அச்சுறுத்திய மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டு, மழை நீர் தேங்காமல் கால்வாய்கள் சீரமைத்ததால் நகரில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் சிக்கலின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. என்.எல்.சி.,மருத்துவமனையில் சிறப்பு டாக்டர்கள் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயாராக வைக்கப்பட்டன.என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில் மேல் மண் மற்றும் நிலக்கரி வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி, இருப்பு வைத்திருந்த நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி செய்ததால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படவில்லை.விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான தமிழக அதிகாரிகள் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சுரங்கங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.பாதித்த கிராம மக்களுக்கு வழங்க என்.எல்.சி.,நிலக்கரி சுரங்க உணவகங்களில் உணவுகள் தயாரித்து அனுப்பினர். நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமையில் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20 போலீசார் சென்னை - கும்பகோணம் சாலையில் பல இடங்களில் ஆம்புலன்சுகள், பொக்லைனுடன் முகாமிட்டு ஆபத்தான பகுதிகளில் வசித்த மக்களை தனியார் மண்டபங்களுக்கு அழைத்து சென்று உணவு வழங்கினர்.