பெண்ணாடம்: கனமழை காரணமாக செம்பேரி தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இரு மாவட்ட கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், 'நிவர்' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கடலுார், அரியலுார், பெரம்பலுார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆணைவாரி, உப்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளாற்றில் கலந்தது.செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் 5 அடிக்கு மேல் நீர்வரத்து துவங்கியதால் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. பாசன மோட்டார்களின் நீர்மட்டம் உயரும் என்பதால் இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.