செஞ்சி; செஞ்சி பகுதியில் 81 இடங்களில் புயல் பாதுகாப்பிற்காக துவக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் 3 ஆயிரத்து 299 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
நிவர் புயல் தாக்குதல் காரணமாக விபத்துக்களை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் செஞ்சி தாலுகாவில் பாலப்பாடி, சத்தியமங்கலம், பாலப்பட்டு, அருகாவூர், காரியமங்கலம், இல்லோடு, அஞ்சாஞ்சேரி உள்ளிட்ட 8 1 இடங்களில் பள்ளிகளில் புயல் பாதுகாப்பு சிறப்பு முகாம்கள் அமைத்துள்ளனர்.இந்த முகாம்களை சுற்றி உள்ள கிராமங்களில் மழை நீர் சூழும் தாழ்வான பகுதி, கூரை வீடுகளில் தங்கியிருந்த 1,089 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்தி 299 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனித்துணை ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில், செஞ்சி தாசில்தார் ராஜன், பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், அறவாழி, குலோத்துங்கன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.இந்த முகாம்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஆய்வு செய்தார். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் முகாமில் உள்ளவர்களுக்கு உணவை தயாரித்து வழங்கி வருகின்றனர்.