அடையாறு; வேளச்சேரி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.'நிவர்' புயல் தாக்கம் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால், வேளச்சேரியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.குறிப்பாக, அம்பேத்கர் நகர், டி.என்.எச்.பி., காலனி, ராம்நகர், தண்டீஸ்வரம் நகர், ஏ.ஜி.எஸ்., காலனி மற்றும் தரமணி பெரியார் நகர் உள்ளிட்ட பல பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டன.வீராங்கால் கால்வாயில் சென்ற நீர், ராம்நகரில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால், அங்கு தரைத்தளத்தில் வசித்தோர், மாடி மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.மாடியில் வசித்தோர், உணவு பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், தேவையான உதவிகள் செய்யப்பட்டன.இரண்டாவது நாளான நேற்று, ராம் நகரை விட்டு வெளியேற விரும்பினர். அவர்களை, மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.சோழிங்கநல்லுார் மண்டலத்தில், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஜவகர் நகர், ராஜா நகர் கடுமையாக பாதிக்கப்பட்டன.காரணை, ஒட்டியம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வந்த தண்ணீரால், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், அங்கு வசித்தோர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கினர்.