சென்னை; ''நிவர் புயலால், உயிர் சேதமும், பொது சொத்துக்கு சேதமும் ஏற்படவில்லை. சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது,'' என, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், தற்போது, 'நிவர்' என்ற புயலை சந்தித்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்கு பருவ மழையில், சென்னைக்கு கிடைக்கும் மழையின் அளவு, 80 செ.மீ., ஆகும். கடந்த, 36 மணி நேரத்தில் மட்டும், சென்னைக்கு, 23 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது.கொரோனா சூழ்நிலைசென்னை மாநகராட்சி அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
சென்னையில் வேளச்சேரி, ராம்நகர், புளியந்தோப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், இயற்கையாக அமைந்த நில அமைப்பின் காரணமாக, நீர் வடியாமல் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதிகளில் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள, 22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.இயல்பாக, 50 - 55 பேர் வரை, தங்க வைக்கப்படும் முகாம்களில், தற்போது, கொரோனா சூழ்நிலையின் காரணமாக, 20 - 25 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளுடன், 4,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
நடமாடும் மருத்துவ முகாம்இவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்தல், கிருமி நாசினி வழங்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.சென்னை மாநகராட்சி நடத்திய மருத்துவ முகாம்களில், 37 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த பருவ மழை காலத்தில், குடிசை மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வசதிக்காக, 15 நடமாடும் மருத்துவ முகாம்களும் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
ஒருவர் இறப்பு
சென்னையில், 152 கட்டடங்கள், பொது மக்கள் வசிக்க தகுதியில்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உரிய கால அவகாசம் அளித்த பின், தீர்வு கிடைக்காத பட்சத்தில், நீதிமன்ற உத்தரவின்படி, கட்டடங்களை இடிக்க முடிவெடுக்கப்படும்.மழையால், எந்த உயிர் சேதமும் இல்லை. ராயப்பேட்டை பகுதியில் மரம் விழுந்ததால், ஒருவர் இறந்துள்ளார். இதை தவிர்த்து, உயிர் சேதம், பொது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை.கொரோனாவை வெல்ல, பொது மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.