திருவொற்றியூர்; பக்கிங்ஹாம் கால்வாயில், நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக, பிரதான கால்வாய்களின் மதகுகள் மூடப்பட்டதால், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தேங்கிய மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது.
புயலால், பெய்த கனமழைக்கு, சென்னை, திருவொற்றியூர் மண்டலம், 6, 7வது வார்டுகளில், பல பகுதிகளில், வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.வடிகால் வசதி இல்லாததால், ஆங்காங்கே மின் மோட்டர்கள் வைத்து, கார்கில் நகர் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் பாய்ச்சி, பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்க செய்வர்.பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்மட்டம் அதிகரித்தால், பிரதான கால்வாய் வழியாக, மழை நீர் பின்னோக்கி ஏறி, மேற்கு பகுதியை மூழ்கடிக்கும். அது போன்ற நேரங்களில், பிரதான கால்வாய் மதகுகள் அடைக்கப்படும்.நேற்று முன்தினம் நள்ளிரவு, புயல் கரையை கடந்த நிலையில், கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால், மேற்கு பகுதி வெள்ளக்காடானது. வடசென்னையின் அனைத்து இடங்களிலும் மழை பெய்ததால், பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும், கடல் வாட்டம் காரணமாக, தண்ணீரை உள்வாங்காததால், தண்ணீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டது.வேறு வழியின்றி, பக்கிங்ஹாம் கால்வாயுடன் இணையும் பிரதான கால்வாய்களின் மதகுகள் அடைக்கப்பட்டன.இதனால், தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி, கார்கில் நகர், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர், கலைஞர் நகர் குடியிருப்புகளை சூழ்ந்தது.நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், மழைநீர் புகுந்ததால், அவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறினர். பக்கிங்ஹாம் கால்வாய் நீர்மட்டம் குறையும் பட்சத்தில், சில மணி நேரங்களில் மழை நீர் வடியக்கூடும்.அதுவரை, ராட்சத மின் மோட்டர் மூலம் மழை நீரை, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தும் பணி நடக்கிறது என, அதிகாரிகள் கூறினர்.