ஆவடி; ஆவடி அருகே, 'செப்டிக் டேங்க்' பள்ளத்தில் விழுந்த, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவடி அருகே வெள்ளானுார், ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 34; லாரி ஓட்டுனர், இவரது மனைவி சங்கீதா, 29. இவர்களது மகன் மோகன்ராஜ், 6. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.கமலக்கண்ணனின் வீட்டிற்கு அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடத்திற்காக, செப்டிக் டேங்க் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால், பள்ளத்தில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதை கவனிக்காத, சிறுவன் மோகன்ராஜ், நேற்று மாலை அங்கு விளையாடிய போது, செப்டிக் டேங்க் பள்ளத்தில் விழுந்து மூழ்கினார்.அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.செப்டிக் டேங்க் பள்ளத்தில் விழுந்து, சிறுவன் உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.