திருத்தணி : அரசு சார்பில் நடத்தப்படும் கிளை நுாலக கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரில், கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இங்கு, தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், நாவல் மற்றும் போட்டி தேர்வுக்கான புத்தகம் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.இந்த நுாலகத்தை அரசு பராமரித்து வருகிறது. இந்நிலையில், கிளை நுாலக கட்டடம் பழுதடைந்து கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுவதால் புத்தகங்கள் நனையும் நிலை இருந்தது.
இதையடுத்து, கிளை நுாலகர் எஸ்.பி. கணேசன், தெரிந்த சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் மற்றும் வாசகர்கள் என, பலரிடம் நிதியுதவி சேகரித்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பழுதடைந்த நுாலக கட்டடத்தை சீரமைத்தார்.மேலும், நுாலகத்திற்கு புதியதாக வண்ணம் பூசப்பட்டது. தற்போது, நுாலகம் சீரமைத்து வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. பணம் மற்றும் பொருளுதவி செய்த பொதுமக்களுக்கு, கிளை நுாலகர் கணேசன் நன்றி தெரிவித்தார்.