விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நேற்று முன்தினம் பம்பை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம் தாலுகா வளவனுார் அருகே உள்ள வி.புதுார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் ,50: விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் மணிவேல், 22: இரு சக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் மணிவேல் தனது நண்பர்களோடு ,வி.மாத்துார் பம்பையாற்றில் குளித்தபோது ஆற்றுநீரில் அடித்து செல்லப்பட்டார்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், விழுப்புரம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று காலை வாலிபரின் உடலை அதே பகுதியில் மீட்டனர்.உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.