திருத்தணி : நந்தி மற்றும் கொற்றலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தரைப்பாலங்கள் மீது, தண்ணீர் செல்வதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
'நிவர்' புயல் காரணமாக, திருத்தணி தாலுகாவில், இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருத்தணி கோட்டத்தில், 79 ஏரிகளில், 12 ஏரிகள் நிரம்பின. தொடர் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், திருத்தணி தாலுகாவில் மட்டும், 26 குடிசை வீடுகள் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.மேலும் மழை நீர் புகுந்த வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் என மொத்தம், 204 வீடுகளில் இருந்து, 560 பேர் பாதுகாப்பாக அரசு பள்ளிகளில் தங்க வைத்து, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
4 அடி தண்ணீர்தொடர் மழையால், பொன்னை அணைக்கட்டில் இருந்து திறந்த தண்ணீரால் சோளிங்கர் ஏரி நிரம்பின. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், நந்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், திருத்தணி ஒன்றியம், செருக்கனுார், கோரமங்கலம், தெக்களூர், திருத்தணி வழியாக பூண்டி ஏரிக்கு சென்றடையும் நந்தி ஆற்றில் வெள்ளம் செல்கிறது. திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை. தெக்களூர் எம்.ஜி.ஆர்.நகர் அருகே. நந்தி ஆறு குறுக்கே கட்டிய தரைப்பாலத்தின் மீது, நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் செல்கிறது.
இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அதே போல், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட கொற்றலை ஆற்றில் வெள்ளம் செல்வதால், திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலை, என்.என். கண்டிகை அருகே ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் சேதம் அடைந்தது. இதனால், அங்கும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
முதியவர் மீட்புதிருத்தணி பைபாஸ் சாலை அருகே செல்லும் நந்தி ஆற்றில் வெள்ளம் செல்லும் போது, 60 வயது முதியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி கடக்க முயன்றார். வெள்ளம் அவரை அடித்து சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக உயிருடன் மீட்டனர்.