வேளச்சேரி : வேளச்சேரியில், குடியிருப்புகளில் புகுந்த ஏரி நீர் வடியாததால், வடிகால்கள் உடைத்து வெளியேற்றப்பட்டது.
கனமழையால், வேளச்சேரி ஏரி நிரம்பியது. பரங்கிமலை, ஆலந்துார், கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து அதிகளவு தண்ணீர் வந்ததால், ஏரி நீர், அருகில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் புகுந்தது.மழை ஓய்ந்தும், வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பால், நேற்றும் தண்ணீர் வடியவில்லை. இதனால், மாநகராட்சி ஊழியர்கள், வடிகால்களை உடைத்து தண்ணீரை வடிய செய்தனர்.வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நேதாஜி நகரில் வடிகால்கள் உள்ளன. ஆனால், எதுவும் பயனில்லாத வகையில் கட்டப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், நீரோட்ட பாதையை கணக்கிட்டு, தேவையான இடங்களில் வடிகால்கள் கட்ட வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.வீராங்கால் கால்வாய் நீர், வேளச்சேரி ராம்நகரில் புகுந்ததால், அங்குள்ள அனைத்து தெருக்களும் மூழ்கின. இதனால், அங்கிருந்த மக்கள் படகு வழியாக வெளியேற்றப்பட்டனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட தரைதள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பல வீடுகளில், பொருட்கள் சேதமடைந்தன. நேற்று, மழைநீர் வடிந்ததால், தெருவில் படிந்த சகதியை அகற்றி, மின்வினியோகம் வழங்கப்பட்டது. இதனால், ராம்நகர் மக்கள் சகஜநிலைக்கு திரும்பினர்.