பூண்டி ஏரியில், நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நான்கு மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 1,000 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான, பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.கடந்த செப்டம்பர் துவக்கத்தில், தண்ணீர் இன்றி வறண்ட காணப்பட்ட பூண்டி நீர்த்தேக்கம், செப்., 21 முதல், கிருஷ்ணா நீர்வரத்தால், நீர்மட்டம் உயரத் துவங்கியது.'நிவர்' புயல் காரணமாக பெய்த தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீரால், நீர்மட்டம் 33.30 அடியை தொட்டது. வினாடிக்கு, 9,000 கன அடி நீர்வரத்து இருக்கிறது. 2.5 டி.எம்.சி., நீர் உள்ளது.
இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று மாலை, 5:45 மணிக்கு, அங்குள்ள, 16 மதகுகளில், நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு, 1,000 கன அடி வீதம், தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறுவதை, உள்ளூர் மக்கள் கண்டுகளித்தனர்.