கொடுங்கையூர், : மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டி மடம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி, இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலையில், மூத்த மகன் முகேஷ், 9, பாட்டி மீனாவிடம் தங்கி, 5ம் வகுப்பு படித்தார்.மூன்று நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், அதே பகுதியில் உள்ள, திறந்தவெளி, ராட்சத கழிவுநீர் கால்வாயில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மதியம், முகேஷ் தன் நண்பர்களுடன் கால்வாயில், மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, திடீரென கால்வாயில் தவறி விழுந்த சிறுவன், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். உடனிருந்த சிறுவர்கள் கூச்சலிடவே, தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், வியாசர்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் கொடுங்கையூர் போலீசார், கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடினர். இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின், சிறுவன் விழுந்த இடத்தில் இருந்து, 300 அடி துாரத்தில், தண்ணீரில் தத்தளித்த சிறுவனை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்த தகவலை தெரிவித்தனர். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.