செங்குன்றம் : வறட்சி காலத்தில், முறையாக பராமரிக்கப்படாத ஏரிகளால், வரமாய் கிடைக்கும் மழை நீர், சேமிக்க வழியின்றி, வழக்கம் போல் வீணாக கடலில் கலக்கிறது.
சென்னை மாதவரத்தில் உள்ள, 550 ஏக்கர் ரெட்டேரி, புழல், மாதவரம், கொளத்துார் சுற்று வட்டாரங்களுக்கான, நிலத்தடி நீராதாரத்திற்கு உதவுகிறது.இந்த நிலையில்,'நிவர்' புயல், மழை எதிரொலியால் அம்பத்துார், கொரட்டூர் ஏரிகளில் இருந்து கிடைத்த உபரி நீரால், ரெட்டேரி வேகமாக நிரம்பியது.இதனால், இந்த ஏரியில் இருந்து, இரண்டு தினங்களாக, புழல் எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் லட்சுமிபுரம் கலங்கல் வழியாக, மழைநீர் வெளியேறி, கால்வாய்களில் பாய்கிறது.
அதில், எம்.ஜி.ஆர்.,நகர் கலங்கல் வழியாக வெளியேறும் நீர், விஜிடேரியன் நகர் வழியாக, மாதவரம் நெடுஞ்சாலையில் பாய்கிறது. அங்கிருந்து, வடபெரும்பாக்கம் பொதுப்பணித் துறை கால்வாயில் கலந்து, எண்ணுார் கடலில் கலக்கிறது. இந்த ஏரி வறண்ட நிலையில் இருந்தபோது, முறையாக துார் வாரப்பட்டிருந்தால், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை, கூடுதலாக சேமிக்க முடிந்திருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக, ஏரி துார் வாரப்படவில்லை.இதனால், கிடைக்கும் நீரை இருப்பு வைக்க முடியாத நிலையில், வழக்கம்போல் வெளியேற்றப்பட்டு வீணாகிறது.மேலும், மழை நீர் போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், விஜிடேரியன் நகர் வழியாக மாதவரம் நெடுஞ்சாலையில், இரண்டு நாட்களாக தேங்கும் தண்ணீரால், 2 கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை சேதம் அடைந்து உள்ளது. கொரட்டூர் ஏரியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.கொரட்டூர் ஏரி: அம்பத்துார் ஏரியில் இருந்து, கொரட்டூர் ஏரிக்கு, உபரி நீர் கிடைத்தது. ஏரியின் வடக்கு பகுதியில், தேங்கிய நீர், நேற்று முன்தினம் முதல், மாதனாங்குப்பம் பகுதி கலங்கல் வழியாக, மாதவரம் ரெட்டேரிக்கு பாய்கிறது.கடந்தாண்டு வறண்டு கிடந்த, கொரட்டூர் ஏரியும் துார் வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த ஏரி முழுமையாக நிரம்பாவிட்டாலும், வடக்கு பகுதியில் தேங்கிய தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது.அங்குள்ள கலங்கலின் மட்டத்தை, 2 அடி உயர்த்த வேண்டும். அப்போதாவது, கணிசமான அளவு தண்ணீரை சேமிக்கலாம் என, கொரட்டூர்வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.புழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும், அத்தியாவசிய தேவையை செய்து வரும், புழல் ஏரி நிரம்பினாலும், மேற்கண்ட ஏரிகளின் நிலையில் தான், தண்ணீர் வீணாகும்.ஏரிகள் துார் வாரப்படாதது மட்டுமல்ல, அவற்றில் உருவாகும் ஆக்கிரமிப்புகளை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததும், இது போன்ற மோசமான நிலைக்கு காரணமாகிறது.பூமிக்கு, 'வரமாய்' கிடைக்கும் மழை நீரை சேமிக்க, இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.