ராமநாதபுரம்:''சமுதாயத்தில், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது,'' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, பி.புகழேந்தி வேதனை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், நாகாச்சி ஊராட்சியில், ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில், பிரார்த்தனைக் கூடம், சமுதாயக் கூடம், உணவுக்கூடம் திறப்பு விழா நடந்தது. இவற்றை திறந்து, நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது:
ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம், எவ்வளவு பெரிய அறிவார்ந்த சமுதாயமாக இருந்தாலும் பயனில்லை. தன் பண்புகளாலும், ஞானத்தாலும், உலகளாவிய அளவில் வென்று காட்டிய ஒரு துறவி, சுவாமி விவேகானந்தர்.நாம், மேலை நாட்டு கலாசாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்து, ஒழுக்கம் என்றால் என்ன என்பதையே மறந்து போனோம். அதனால் தான், லஞ்சம் வாங்குவது தவறே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் யாருக்குமே வெட்கமும் இல்லை. இளைஞர்கள் எல்லாம், இன்று டாஸ்மாக் கடைகளில் நிற்கின்றனர். இப்படியே போனால், இந்த சமுதாயம் என்னவாகும் என்று தெரியவில்லை. இதை எல்லாம் தடுத்து, மக்களுக்கு நல்வழி காட்ட, உங்களைப் போன்ற அமைப்பால் தான் முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.