திருப்பூர்:வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.திருப்பூர், காலேஜ் ரோட்டில், துாத்துக்குடியை சேர்ந்த இசக்கி, 27 மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர், 30 இருவரும் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த, 2ம் தேதி, பூட்டப்பட்டு கிடந்த அவர்கள் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.வடக்கு போலீசார், சோதனையிட்டு, தண்ணீர் தொட்டியில் இசக்கியின் சடலத்தை கைப்பற்றினர். உடனிருந்த சங்கர் தலைமறைவாகி விட்டார். இதில், ஈரோட்டில் ஒரு வழக்கு தொடர்பாக சங்கர் கைது செய்து சிறையில் இருந்த விவரம் தெரிய வந்தது.வடக்கு போலீசார் இசக்கி கொலை தொடர்பாக சங்கரிடம் விசாரணை நடத்த, போலீஸ் கஸ்டடி எடுக்க கோர்ட்டில் மனு அளித்தனர். அவரை ஒரு நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது. நேற்று முன்தினம் அவரை கஸ்டடி எடுத்த போலீசார் இசக்கி கொலை தொடர்பாக விசாரித்தனர்.விசாரணையில், நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்கு வாதம் தகராறாக மாறி, இசக்கி கொலையான விவரம் தெரிந்தது. அவரிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.