கோவை:இரட்டிப்பு பணம் தருவதாக, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்தவர் அனில் குமார், 43. கோவை சாய்பாபா காலனியில் தங்கியிருந்த இவர், பிரேம், செல்வராஜ், சுரேஷ், ரவிக்குமார், ஆர்த்தி, பாபு ஆகியோருடன் சேர்ந்து, 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தை நடத்தி வந்தார். நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பின், செலுத்திய பணத்தை இரட்டிப்பாக தருவதாக அறிவித்திருந்தார்.
கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர். குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டும் தொகையை கொடுத்து வந்த நிலையில், அதன் பின் பணம் கொடுக்கப் பட வில்லை. இதையடுத்து, 2019-ம் ஆண்டு கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம், செல்வராஜ், சுரேஷ் ஆகிய மூவரை, எட்டு மாதங்களுக்கு முன் கைது செய்தனர். தலைமறைவான அனில் குமார் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அனில் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.