திருப்பூர்:பாரப்பாளையம் அருகே, நேற்று காலை முதல் மதியம் வரை, சாக்கடை கால்வாயில், சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது.திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையத்திலிருந்து ராயபுரம் செல்லும் ரோட்டில், திருநகர் பகுதியில், சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில், நேற்று காலை, 9:30 மணியளவில் வெளிர்நீல நிறத்தில், சாயக்கழிவுநீர் ஓடியது.போக்குவரத்து மிகுந்த பகுதியில், பட்டப்பகலில், சாக்கடை கால்வாயில் சாயக் கழிவுநீர் ஓடியதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து, மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார், உதவி பொறியாளர் பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சாயக்கழிவுநீர் ஓடிய பகுதியில், முழுமையாக ஆய்வு நடத்தினோம். குறிப்பிட்ட இடத்துக்குமேல், சாயம் வெளியேறியதற்கான எந்த தடயமும் இல்லை. பொதுமக்கள் கூறுவதுபோல், வாகனங்களில் சாயத்தை கொண்டு வந்து, இப்பகுதியில் வெளியேற்றி சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.யாரேனும் சாயத்தை வெளியேற்றுவது தெரிந்தால், 80560 33416 என்கிற தொடர்பு எண்ணும் வழங்கியுள்ளோம். இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்; விரைவில் சாயம் வெளியேற்றிய நிறுவனத்தை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.