அன்னுார்:'ஆன்லைன்' வாயிலாக நடந்த குறைதீர் கூட்டத்தில், அன்னுார் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி, கலெக்டர் அலுவலகத்தில் நடப்பது வழக்கம். கொரோனா காரணமாக, இரண்டு மாதங்களாக வட்டார வேளாண் அலுவலகத்தில் நடக்கிறது.நேற்று, அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில், 'ஆன்லைன்' வாயிலாக கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.அன்னுார் விவசாயி ராமசாமி பேசியதாவது:சொட்டுநீர் பாசனத்தில், 100 சதவீத மானியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வெளிமார்க்கெட் விலையை விட மானியத்தில் வழங்கப்படும் சொட்டு நீர் பாசன கருவிகள், விலை மிக அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய ரக விதைகள் வழங்குவதில்லை. அதுவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது.உதவி வேளாண் அலுவலர்கள் பயிர் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். கணக்கெடுப்பில், விவசாயியின் மொத்த நிலப்பரப்பு, சப்-டிவிஷன் வாரியாக எவ்வளவு பயிர் செய்யப்பட்டுள்ளது என்கிற முழு விபரம் எடுப்பதில்லை. இதனால், வங்கியில் கடன் வாங்கும் போது விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் உடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது கணக்கெடுப்பை, கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேசுகையில், 'அல்லப்பாளையம் ஊராட்சி, கோனார்பாளையம், குட்டை அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ளது. அதை சேர்க்க வேண்டும்' என்றனர்.உழவர் விவாதக் குழு அமைப்பாளர் ரங்கசாமி பேசுகையில், ''எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, தேவம்பாளையத்தில், கள்ளிப்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தடுப்பணையில் பிளவு ஏற்பட்டு மழைநீர் வெளியேறி விடுகிறது. இதனால் தடுப்பணையில் நீர் தேங்குவது இல்லை. உடனே அந்த தடுப்பணையில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்,'' என்றார்.புகார்களை கேட்ட கலெக்டர், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். நேற்றைய ஆன்லைன் கூட்டத்தில், அன்னுார் வட்டாரத்தில் இருந்து, ஆறு விவசாயிகள் மட்டும் பங்கேற்றனர். அவர்களுடன், வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா பங்கேற்றனர்.