ஊட்டி:நடமாட இயலாத முதியோர், மாற்றுத் திறனாளிகள் தகுதியான நபர் ஒருவரை நியமனம் செய்து, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:உடல் நலக்குறைப்பாடு,வயது மூப்பு காரணமாக, நியாய விலை கடைக்கு சென்று உணவுப் பொருட்கள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நியாயவிலை கடைகளில் இருந்து பெற தகுதியான நபர் ஒருவரை நியமித்து கொள்ளலாம்.அதன்படி, நியாய விலை கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, நியாயவிலை கடை பணியாளர் வசம் ஒப்படைத்து, அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். இந்த படிவத்தில் அட்டைதாரர் சார்பில், உணவு பண்டங்கள் பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் விபரம் தவறாமல் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.வட்ட வழங்கல் அலுவலர் அந்த மனுவின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, உண்மை தன்மையை ஆராய்ந்து தகுதியிருப்பின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக உணவு பண்டங்கள் பெறுவதற்கான அனுமதி வழங்குவார்.நடமாட முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.