கூடலுார்;கூடலுார் சிங்காரா உயர் மின்னழுத்த பாதையில், மீண்டும் மின்கம்பிகள் மாற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், சிங்காரா மின் நிலையத்திலிருந்து, கூடலுார் உப்பட்டி சேரம்பாடி துணை மின் நிலையங்களுக்கு, 'மின் சப்ளை' வழங்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தடத்தில, 1932ல் அமைக்கப்பட்ட உயர் மின்னழுத்த மின்கம்பிகள் அடிக்கடி சேதமடைந்து மின் சப்ளை பாதிக்கப்பட்டது.இதனை சீரமைக்க, அரசு, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த ஆண்டு பணிகளை துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாதம் பணிகள் நிறுத்தப்பட்டன.இதனால், பருவ மழையின் போது இவ்வழித்தடத்தில், மீண்டும் மின்கம்பிகள் சேதமடைந்து, கூடலுார் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள், தற்போது துரிதமாக நடந்து வருகிறது.கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,''இவ்வழித்தடத்தில், உள்ள, 137 உயர் மின் அழுத்த டவர்களில், 109 டவர்களில் மின்கம்பிகளை மாற்றும் பணி, ஏற்கனவே முடிந்துவிட்டது, மீதமுள்ள, 28 டவர்களில் மின்கம்பி மாற்றும் பணி நடந்து வருகிறது. பணிகள், விரைவில் நிறைவு பெறும். அதன் பின், உயர் அழுத்த கம்பிகளின் மின்சப்ளை பணியில் பிரச்னை இருக்காது,'' என்றார்.