வால்பாறை:வால்பாறையில், யானையிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, மொபைல் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 17,335 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 48 ரேஷன்கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள் அங்குள்ள ரேஷன்கடையை தாக்குகின்றன. இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக கிடைப்பதில்லை.குறிப்பாக, நல்லமுடி, தாய்முடி, கருமலை, சின்கோனா, ஸ்டேன்மோர், உருளிக்கல், அய்யர்பாடி பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளை, யானைகள் தாக்குகின்றன. இதனால், யானைகள் நடமாடும் பகுதியில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பொருட்களை வாங்கி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில், மொபைல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீதம், மாதத்தில் நான்கு நாட்களாவது எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும்.அதே போன்று, தொலை துாரப்பகுதிகளுக்கு ரேஷன் பொருட்களை மக்கள் சுமத்து செல்வதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க, அந்தப்பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்,' என்றனர்.