பொள்ளாச்சி:பலத்த காற்று வீசுவதால், அறுவடைக்கு காத்திருக்கும் வாழைகள் முறிந்து வீணாகும் அபாயத்தை தவிர்க்க, வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என, தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், வாழை சாகுபடி அதிகம் உள்ளது. குறிப்பாக, வாழையில், நேந்திரன், பூவன், செவ்வாழை ரகங்கள் அதிக பரப்பளவில், சொட்டு நீரிலும், வாய்க்கால் பாசனத்திலும் நடவு செய்யப்பட்டுள்ளது.வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர், பயிர் வளர்ச்சி, நோய் தாக்குதல் மற்றும் தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து தெளிவுபடுத்துகின்றனர்.பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி கூறுகையில், ''தென்னைகளுக்கு அடுத்தபடியாக, 300 ஏக்கரில் பலவகை வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பெரும்பாலும், ஏழு மாதம் முதல், 10 மாதங்களான வாழைகள், உயரமாக வளர்ந்து, குலைகளுடன் காணப்படுகின்றன.தற்போது, காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. காற்றுக்கேற்ப வாழைகளும் தாறுமாறாக ஆடுகின்றன. இவை சாய்ந்தும், முறிந்தும் விழுந்தால், இழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க, வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். இதனால், வாழைத்தார்களை சேதாரமின்றி அறுவடை செய்யலாம்,'' என்றார்.