வால்பாறை:வால்பாறை எஸ்டேட் பகுதியில் மொபைல்போன் சிக்னல் கிடைக்காததால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில், முடீஸ், காடம்பாறை, கவர்க்கல், சோலையாறு நகர் உள்ளிட்ட, 11 இடங்களில் மொபைல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், வால்பாறையில் பெரும்பாலான இடங்களில் மொபைல்போன் சிக்னல் கிடைக்காமல் பள்ளி மாணவர்கள் 'ஆன்லைன்' வகுப்புக்களில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடிபிடித்து, 'ஆன்லைன்' வகுப்புக்களில் பங்கேற்கின்றனர்.மாணவர்கள் கூறுகையில், 'எஸ்டேட் குடியிருப்பு பகுதியில், மொபைல்போன் நெட்ஒர்க் கிடைப்பதில்லை. இதனால், ஒரு கி.மீ., தொலைவில் சிக்னல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடித்து, 'ஆன்லைன்' வகுப்புக்களில் பங்கேற்க வேண்டியுள்ளது. வால்பாறையில், பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் கிடைக்கும் வகையில், கூடுதலாக மொபைல்போன் டவர் அமைக்க வேண்டும்,' என்றனர்.