தென்னை நாரும், கண்களுக்கு விருந்தளிக்கும், கலை வண்ண படைப்புகளாக, மகளிரின் கைவண்ணத்தில், உருவாக, கயிறு வாரியம் வழிகாட்டுகிறது. இப்படைப்புகளுக்கு, அனைவரும் கைகொடுத்தால், சூழலும், மகளிரின் பொருளாதாரமும் மேம்படும்.கல்லும், மண்ணும், கைவண்ணத்தில், கலை படைப்புகளாக, நம் வாழ்வில், இரண்டற கலந்து விட்டது; அதிலும், மகளிரின் அழகு மிளிரும் படைப்புகளுக்கு, தனியிடம் உண்டு. அவ்வாறு, தென்னை நாரை மூலப்பொருளாக கொண்டு, பெண்கள் உற்பத்தி செய்யும், கலை படைப்புகள் பார்ப்பவர்களை ஈர்ப்பதை தவிர்க்க முடியாது.அவ்வாறு, கயிறுவாரியம், தென்னை நாரில் இருந்து கால் மிதியடி மட்டுமல்லாது, வீட்டை அலங்கரிக்கும், குதிரை, மான், முதலை, ஒட்டகச்சிவிங்கி, ஸ்டாண்ட் ஆகியவை தயாரிக்கவும், ஊக்கத்தொகையுடன் பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. தற்போது, பொட்டையம்பாளையம் கிராம பெண்களுக்கு, கயிறு வாரியம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், இரண்டு மாத பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்பட்ட, கயிறுகளை கொண்டு, கால் மிதியடி தயாரிக்க, முதற்கட்டமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. பின்னர், பல வகை கயிறுகளை கொண்டு, வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி துவங்குகிறது.வீட்டில் இருந்தபடியே, சுயதொழில் மூலம், வருவாய் ஈட்ட ஆர்வம் காட்டும் பெண்களுக்கு, இத்தகைய பயிற்சிகள் வரப்பிரசாதமாக அமைகிறது. பயிற்சிக்குப்பிறகு, சான்றிதழும், தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு, வங்கிக்கடனும் பெற்றுத்தர வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.தங்களையும், வீட்டையும், அலங்கரிப்பதில், தனித்திறமை கொண்ட பெண்களிடம், தென்னை நாரும், உயிரோட்டமுள்ள கலைப்பொருளாக மாறுவதை நேரடியாக நாம் பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய கலைப்பொருட்களை வாங்கி, பயன்படுத்தினால், தொழிலில், ஈடுபடும் பெண்களுக்கு, நிரந்தர வருவாயும் கிடைக்கும்.