சுழற்றி பாய்ந்து, சொல்லி அடிக்கும் கில்லிகளாக வலம் வர சிலம்ப பயிற்சியில் தயாராகி வருகின்றனர் உடுமலை மாணவர்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்களின் கலை ஆர்வம், அவர்களின் வாழ்வியலோடு தொடர்புடைய ஒன்றாகவும், மேம்படுத்தும் வகையிலும் இருந்தது.தற்காப்பு கலையாக, இப்போது பிரித்து பார்க்கப்படும் சிலம்பமும், களரியும், குழந்தைகளுக்கான அடிப்படை கற்றலாக காணப்பட்டது. இத்தகைய பாரம்பரியத்தை, வளர்ந்து வரும் தலைமுறைகள் மீண்டும், அடிப்படை கற்றலாக மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த மூன்றாண்டுகளாக, உடுமலை இரண்டாம் கிளை நுாலகம், மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் மற்றும் களரி பயிற்சி பள்ளியுடன் இணைந்து, மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர்.மூன்றாண்டுகளாக நடக்கும் இப்பயிற்சி, கொரோனா பாதிப்பு காரணமாக சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கோவை, பொள்ளாச்சி, தாராபுரம் என, மாணவர்கள் ஆர்வத்தோடு இதில் களமிறங்கியுள்ளனர்.ஆறு வயது முதல், கல்லுாரி மாணவர்கள் வரை, 112 பேர், இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடக்கிறது.சுவடு முறை, மெய், வால் வீச்சு, சுருள், கம்பு வீச்சு என பலவிதமான கட்டங்களில் இப்பயிற்சியை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில் பயிற்சியாளர்கள வீரமணி மற்றும் செந்தில்குமார் அளிக்கின்றனர்.சிலம்ப ஆசிரியர் வீரமணி கூறுகையில், ''சிலம்ப மற்றும் களரியில், 27 ஆண்டு கால பயிற்சி அனுபவம் உள்ளது. கலை என்பதை கற்றலாக மட்டுமே பார்க்காமல், வாழ்வியலோடு தொடர்புபடுத்த வேண்டும். சிலம்பம் தற்காப்பு மட்டுமின்றி, மருத்துவம், யோகா வரை, உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியது. இம்மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, பரிசு பெறுகின்றனர். இவ்வாறு வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது,'' என்றார்.இது தொடர்பான விவரங்களுக்கு, உடுமலை உழவர் சந்தை ரோட்டிலுள்ள இரண்டாம் கிளை நுாலகத்தை அணுகலாம்.