திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, ஆடலுார், பன்றிமலை, ஆத்துார், ஒட்டன்சத்திரம், பழநியில் பெரும்பாலான தோட்டங்கள் வனங்களை ஒட்டியுள்ளன. இங்கு உணவு, தண்ணீரை தேடி தோட்டங்களுக்குள் புகும் காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவற்றை விரட்ட, விவசாயிகள் பட்டாசுகளை வெடிப்பது, தோட்டங்களை சுற்றி வண்ண புடவைகளை வேலியாக கட்டுவது என செயல்படுகின்றனர்.சிலர் கம்பி வேலிகளை அமைத்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வனவிலங்குகளை விரட்ட தற்போது மருந்து அறிமுகமாகி உள்ளது.'நீல்போ' எனும் அம்மருந்தை 500 மி.லி., அளவுக்கு எடுத்து 2.50 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் சேலை அல்லது துணிகளை ஊற வைத்து விளை நிலங்களை சுற்றி வேலியாக கட்டலாம். இம்மருந்தில் இருந்து வரும் வாசனை விலங்குகளை விளை நிலம் அருகில் நெருங்க விடாது. ஒரு முறை கட்டினால் 45 நாட்களுக்கு பலனளிக்கும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.வன அலுவலர் வித்யா கூறுகையில், 'சோதனை முறையில் ஒரு சில விவசாயிகளுக்கு மருந்தை பரிந்துரைத்தோம். பிற மாவட்டங்களில் பயன்படுத்தியதில் நல்ல பலனளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்' என்றார்.