எரியோடு: எரியோடு அருகே 4 வீடுகளை உடைத்து 22 பவுன் நகை, ரூ.4.65 லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.எரியோடு தோப்புப்பட்டி களத்துவீட்டை சேர்ந்தவர் பாலமுருகன். கோவிலுாரில் மருந்துக்கடை நடத்துகிறார். இவரது மனைவி சத்யபிரியா. அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.பழநியில் நடந்த திருமண விழாவில் தம்பதி இருவரும், நேற்றுமுன்தினம் இரவு சென்று நேற்று மதியம் ஊர் திரும்பினர். யாருமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.3.95 லட்சம் பணம் கொள்ளையடித்துள்ளனர்.அதன்பின் நேற்று பகலில் ஆர்.கோம்பை பாரதிநகரில் வசிக்கும் காளியப்பன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றார். அதேநேரம் வீட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கூம்பூர் அருகே புதுவாணிக்கரை தேவராஜ், கணேசன் ஆகியோர் அழகாபுரியில் திருமண விழாவுக்குச் சென்ற நேரத்தில் இருவரது வீடுகளும் உடைக்கப்பட்டு பீரோக்களில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. தேவராஜ் வீட்டில் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. கணேசன் வீட்டில் பணம் இல்லை. இங்கிருந்து அரை கி.மீ., துாரத்தில் ஒரு வீட்டிற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அங்கிருந்த கல்லுாரி மாணவி பிரியதர்ஷனி கூச்சலிடவே கொள்ளையர்கள் தப்பினர்.