தேனி: 'வரும் ... ஆனா வராது'என்ற திரைப்பட நகைச்சுவை காட்சியை மெய்ப்பிக்கும் வகையில் மதுரை- போடி அகல ரயில்பாதை பணி 10 ஆண்டாக ஆமை வேகத்தில் நடந்துவருகிறது.
குறைவான நிதி ஒதுக்கீடு, அரசு துறைகளில் 'ஈகோ'வால் பணி முழுமையடைய இன்னும் இரு ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அப்போதும் தேனிக்கு ரயில் வருமா என உறுதியாக கூற முடியாது. மொத்தத்தில் இத்திட்டம் கட்சிகளின் சம்பிரதாய தேர்தல் வாக்குறுதிபோல மாறிவிட்டது.
மதுரை - போடி 90.4 கி.மீ.,துார மீட்டர்கேஜ் பாதையை ரூ.100 கோடி மதிப்பீட்டில் அகல ரயில்பாதையாக மாற்றும் பணிக்காக 2011 ஜனவரியில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. 2014-2015 ல் அகல ரயில்பாதை பணிகள் முடியும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அப்போதைய மத்திய காங்., அரசு ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பெயரளவிற்கு நிதி ஒதுக்கியதால் பணிகள் துவங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. இத் திட்டத்தால் ரயில்வேக்கு லாபமில்லை என்ற தவறான கருத்தால் கிடப்பில் போட்டதே காரணம். திட்டத்திற்கான நிதியும் திருப்பி அனுப்பப்பட்டது.
போராட்ட குழு
இத் திட்டத்தை செயல்படுத்த போடி - மதுரை அகல ரயில்பாதை துரிதப்படுத்தும் குழு என 2011ல் துவங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள், நகர் நல சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து திட்டத்தை விரைந்து முடிக்க பல போராட்டங்களை நடத்தின. 2013 ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்து விரைந்து முடிக்க வலியுறுத்தினர். ஆனால் ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கி சில இடங்களில் பாலம் வேலை நடந்தது.
அதன்பின் பா.ஜ., ஆட்சியிலும் முயற்சி தொடர்ந்தது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் பயணிப்பர்.
காபி உள்ளிட்ட பண பயிர்கள் ஏற்றுமதியால் ஆண்டுக்கு ரூ.200 கோடி ரயில்வேக்கு லாபம் கிடைக்கும் என புள்ளி விபரங்களுடன் எடுத்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் என 2016ல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. திட்ட மதிப்பீடும் ரூ.450 கோடியாக உயர்ந்தது. கடந்த பா.ஜ. ஆட்சியில் ரூ.200 கோடி வரை ஒதுக்கீடு செய்து விரைவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக முக்கிய பாலம், தண்டவாள பணிகள் சுறுசுறுப்பாகியது.
டிசம்பரில் சோதனை ஓட்டம்
திட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக டெண்டர் விடப்படுகிறது. உசிலம்பட்டி- ஆண்டிபட்டி வரையிலான பணிக்கு டெண்டர் எடுத்தவர் 2 ஆண்டாக துவக்காமல் கிடப்பில் போட்டார். இதற்காக ரூ. ஒருகோடி அபராதம் வசூலித்து வேறு ஒருவரை நியமித்தனர்.
அதன்பின் பணியில் வேகம் பிடித்தது. மதுரை முதல் ஆண்டிபட்டி வரை 58 கி.மீ. துார பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டம் டிசம்பர் முதல்வாரத்தில் நடக்க உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிக்க வேண்டிய திட்டத்தில் 60 சதவீதம் தான் நிறைவு பெற்றது. ஆண்டிபட்டியில்
இருந்து போடி வரை 32 கி.மீ.துார பணிகள் வேகமில்லை. ரவீந்திரநாத் எம்.பி.முயற்சியால் ரூ.125 கோடி கிடைத்தது.
அதன்பின்பு ஆண்டிபட்டி - தேனி தண்டவாளம் அமைக்கும்
பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.
துறைகளிடையே 'ஈகோ'
தேனியில் 520 மீ., நீளம், போடியில் 600மீ நீள ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டும்.
தேனி பழைய ஸ்டேஷனில் உள்ள 50 மரங்களை வெட்டியபின் பணிகள் மேற்கொள்ள முடியும். இந்த மரம் சமூக காடுகள் திட்டத்தில் உள்ளதால் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை நிலவுகிறது. இறுதியில் மரத்தை ரயில்வே துறை ஏலம் விட்டு வெட்டி அந்த பணத்தை வனத்துறைக்கு செலுத்த உத்தரவிட்டது. ரயில்வே இடத்தில் உள்ள மரத்தை வெட்டி வனத்துறைக்கு ஏன் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
இரு துறைகளின் 'ஈகோ'வால் ஸ்டேஷன் பணி துவக்கவில்லை. திட்ட பணிக்கு ரயில்வே இடத்தில் எடுக்கப்படும் மண், ஜல்லிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதிலும் தாமதம் நிலவுகிறது. ஆண்டிபட்டி சோதனை ஓட்டம் முடிந்து 2021 மார்ச்சில் தேனி ரயில்வே ஸ்டேஷன் பணியை முடிப்பதாகவும், போடி வரை 2021 அக்டோரில் முடிக்க உள்ளதாக ரயில்வே துறையினர் கூறுகின்றனர்.
இதுவரை ரூ.330கோடிக்கு பணிகள் நடந்துள்ளது. இன்னும் ரூ.120 கோடி ஒரே தவணையில் நிதி ஒதுக்கிட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் தாமதம் என்றால் 2022ல்தான் முழுமை பெறும். அதுவரை தேனிக்கு ரயில் வரும்... ஆனா வராது... என்ற நிலைதான் தொடரும்.
ஒரே தவணை
சங்கரநாராயணன், போராட்ட குழுத்தலைவர், தேனி : போடி-மதுரை அகல ரயில்பாதை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல் -குமுளி ரயில்வே திட்டத்தை அனுமதிக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். போடி அகலரயில்பாதை திட்டத்திற்கு ஒரே தவணையில் எஞ்சிய தொகைளை ஒதுக்கி அடுத்த ஆண்டில் பணியை முடிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும். அரசு துறைகளின் ஈகோ களைந்து பணியை வேகப்படுத்த வேண்டும்.
பணியில் வேகமில்லை
ராமமூர்த்தி ,போராட்ட குழு துணைத்தலைவர், தேனி: இந்தியாவிலேயே ரயில் ஓடாத மாவட்டம் தேனிதான். பணியை விரைவுபடுத்த 10 ஆண்டாக போராடுகிறோம். இப்போது ஓரளவிற்கு நடக்கிறது. ஆனால் வேகமில்லை. தேனி, போடி தடத்தில் பணியை விரைவுபடுத்த பிரச்னைகளை களைய வேண்டும். பயணிகள் வசதியை கருதி தேனி புது பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் ரயில்நிறுத்தம்,பெரியகுளம் ரோடு குட்செட் தெருவில் ரயில் நிறுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.