அந்தியூர்: அந்தியூர்-பர்கூர் சாலையில், சீதாலட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து, 100 மீ., தொலைவில், பெரியஏரி சாலையில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க, தனியார் நிலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் இருந்து, 200 மீ., தொலைவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதனால், அப்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், தாலுகா அலுவலக அதிகாரிகளிடம், கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி, மனு கொடுத்தனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாத அதிகாரிகள், கட்டடம் கட்டி முடித்து விட்டனர். விரைவில் கடை திறப்பு விழா காணப்படும் என்று தெரிகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். தங்கள் ஆதங்கத்தை, சமூக வலைதளங்களில் தெரிவித்து, எதிர்ப்பை பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர். இதுகுறித்து, அந்தியூர் தாசில்தார் மாரிமுத்து கூறியதாவது: கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, புகார் மனு அளித்திருந்தனர். அதை டாஸ்மாக் மேலாளருக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.