ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 30வது வார்டு ஓம்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள, சகன் வீதியில் தார்சாலை அமைக்காமல், சாக்கடை மற்றும் மழை நீர் தேங்கி மோசமாக காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட வீதிகளில் மூன்றாண்டுக்கு முன், பாதாள சாக்கடைக்காக குழி தோண்டினர். அதை முறையாக மூடவில்லை. இதை தொடர்ந்து ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் உட்பட, பல்வேறு பணிக்காக குழி தோண்டி, சாலை அமைக்கவில்லை. இதனால், மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி, பத்து நாட்களுக்கு மேலாக, நடக்கக்கூட முடியாத அளவு சாலை மோசமாக காணப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கியும், நடவடிக்கை இல்லையென, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.