பவானி: பவானி-மேட்டூர் பிரதான சாலையில், மேட்டூர், தொப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை போன்ற பகுதிகளில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும், நாள்தோறும் நூற்றுக்கும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கின்றன. மாநில நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், சமீப காலமாக இந்த சாலையில், கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறுகலான சாலை என்பதால், அதிவேகத்தில் வரும் வாகனங்கள், முட்டிக் கொள்கின்றன. நேற்று முன்தினம் இரு தனியார் பஸ்கள், நேருக்குநேர் மோதவிருந்த நிலையில், விபத்து தவிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே, சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், முயற்சி மேற்கொள்ளவில்லை. மேலும் மெத்தனம் காட்டாமல், சாலையை அகலப்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.