வீரபாண்டி: குப்பைக்கு தீ வைத்து எரித்தபோது, அதில் கிடந்த பாட்டில் வெடித்து சிதறி, தீப்பிடித்ததில் மூதாட்டி பலியானார். வீரபாண்டி, மேட்டுத்தெருவை சேர்ந்த, மாணிக்கம் மனைவி சுசீலா, 70. கணவர் இறந்த நிலையில், குழந்தைகள் இல்லாததால், அக்கம் பக்கம் வீடுகளில் வேலை செய்து, தனியாக வசித்துவந்தார். கடந்த, 23 மதியம், 1:00 மணிக்கு, தன் வீட்டின் முன் குவிந்திருந்த குப்பையை பொறுக்கி தீ வைத்தார். அப்போது, அதில் இருந்த, பிளாஸ்டிக் பாட்டில், எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில், சுசீலா மீது தீப்பற்றிக்கொண்டது. அவரது அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, மறுநாள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அங்கு அவர் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.